×

வடமாநில தொழிலதிபருக்கு ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.1.40 கோடி மோசடி செய்த பாஜ மாநில நிர்வாகி கைது: பெண் தோழி உள்பட 3 பேரும் சிக்கினர், ரூ.1 கோடி ரொக்கம், 2 சொகுசு கார் பறிமுதல்

சென்னை: வடமாநில தொழிலதிபருக்கு ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.1.40 கோடி மோசடி செய்த பாஜ மாநில விவசாய அணி துணை தலைவர் ராஜசேகர், அவரது பெண் தோழி உள்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹர்ந்தர் பால் சிங். இவர், கடந்த 11ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் ‘பால் அக்வா’ என்ற பெயரில் அரியானாவில் நிறுவனம் நடத்தி வருகிறேன். நண்பர்கள் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (எ) எஸ்.ஆர்.தேவர் (65) என்பவர் அறிமுகமானார். அவர் எனது நிறுவன வளர்ச்சிக்காக ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

மேலும், சென்னை ஆலப்பாக்கம் ரஜிதா மெர்னல்சன் (எ) ரேஷ்மின் (36), கே.கே.நகரை சேர்ந்த ராமு (37), வளசரவாக்கத்தை சேர்ந்த தசரதன் (30) ஆகியோரை தனது நண்பர்கள் என அறிமுகம் செய்தார். பிறகு ராஜசேகர் நண்பர்களுடன் சேர்ந்து, ‘எங்களுக்கு சிங்கப்பூர் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தெரியும், அவர் மூலம் ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக 2 விழுக்காடு தபால் முத்திரை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.1.40 கோடி ரொக்கம் தரவேண்டும் என்றார். அவர்களின் வார்த்தையை நம்பி, அவர்களுக்கு ரூ.1.40 கோடி பணத்தை கொடுத்தேன். பிறகு அவர்கள் ரூ.70 கோடிக்கான வரைவோலையை என்னிடம் காட்டி வங்கி கணக்கில் வரவு வைப்பதாக கூறினர்.

ஆனால் ரூ.70 கோடி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். நான் கொடுத்த ரூ.1.40 கோடியை திரும்ப கொடுத்து விடுங்கள் என்று கேட்டதற்கு, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தார் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி, உதவி கமிஷனர் லோகேஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், ராஜசேகர் தற்போது பாஜ விவசாய அணி மாநில துணை தலைவராக உள்ளார்.

2014ல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அகில இந்திய பார்வர்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் வடமாநில தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 7 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரளமாக ஆங்கிலத்தில் பேச தனது தோழியான ரஜிதா மெர்னல்சன் (எ) ரேஷ்மின் என்பவரை பயன்படுத்தியுள்ளார். அவரது கணவர் போர்ச்சுக்கலில் பணியாற்றி வருகிறார்.

தற்போது ரஜிதா மெர்னல்சன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். கடன் கேட்க வரும் வடமாநில தொழிலதிபர்களை மயக்கி மோசடி செய்துள்ளார். இதைதொடர்ந்து உதவி கமிஷனர் லோகேஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர் அதிரடியாக பாஜ விவசாய அணி மாநில துணை தலைவர் ராஜசேகர், ரஜிதா மெர்னல்சன், ராமு, தசரதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.1 கோடி ரொக்கம், 2 சொகுசு கார்கள், மோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள், போலி முத்திரைத்தாள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது ெசய்யப்பட்ட ராஜசேகர் மீது 7 மோசடி வழக்குகள் உள்ளதால் அவர் மற்றும் அவரது பெண் தோழியான ரஜிதா மெர்னல்சன் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post வடமாநில தொழிலதிபருக்கு ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.1.40 கோடி மோசடி செய்த பாஜ மாநில நிர்வாகி கைது: பெண் தோழி உள்பட 3 பேரும் சிக்கினர், ரூ.1 கோடி ரொக்கம், 2 சொகுசு கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Executive ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது...